சட்ட விரோதமாக நடத்தப்பட்ட கல்குவாரி - பெண் உள்பட 7 பேர் கைது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள A.வாடிப்பட்டி பகுதியில் லதா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் கனிமவளத்துறை அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வந்தது. இது குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லுவிற்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் ஜெயமங்கலம் காவல் ஆய்வாளர் உட்பட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கல்குவாரியில் வேலை பார்த்த 4 நபர்கள் மற்றும் நில உரிமையாளர் லதா உட்பட 7 நபர்களை ஜெயமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கு பாறைகளை உடைக்க பயன்படுத்திய செல்லட்டின் குச்சி 20, களி 60 மற்றும் வெடி மருந்து15 கிலோ உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலச்சந்திரன் என்ற சிலை செய்யும் சிற்பி நிலத்தில் உள்ள பாறாங்கற்களை சிலை செய்வதற்காக எடுத்துக்கொண்டு நிலத்தை சீர்படுத்தி தருவதாக கூறியதாக அவர்கள் போலீசாரிடன் தெரிவித்தனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த கல் குவாரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. குவாரி நடத்தி வந்த பாலச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் அனுமதி இன்றி முறைகேடாக செயல்பட்ட குவாரியை ஆய்வு மேற்கொண்டனர். வேறு எங்கும் சட்டோரவிரோதமாக கல்குவாரிகள் நடத்தி வருகிறார்களா? என்ற கோணத்தில் ஜெயமங்கலம் காவல்துறையினர் சாரணை நடத்தி வருகின்றனர்.