For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்...” - பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்!

03:56 PM May 03, 2024 IST | Web Editor
“என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால்   ”   பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம்
Advertisement

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ்க்கு எதிராக ராஜ்பவன் பெண் ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள நிலையில், ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு,  மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர்மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார். ராஜ்பவன் வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளார். நிரந்தர வேலை கொடுப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை மானபங்கம் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன் தரப்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில்,

“ஆளுநர் ஆனந்த் போஸுக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஏஜென்ட் அதிருப்தி ஊழியர்களால், சில இழிவான கதைகள் பரப்பப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் ஆளுநருக்கு ஊழியர்கள் துணையாக இருக்கின்றனர்.

இதுகுறித்து ஆளுநர் கூறியதாவது, ‘உண்மை வெல்லும். திரிக்கப்பட்ட கதைகளுக்கு நான் பயப்படமாட்டேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் நிறுத்த முடியாது’” என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டால் பிரதமர் ராஜ்பவனில் தங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர்மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags :
Advertisement