“விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்..” - #EPS -க்கு #DyCM உதயநிதி ஸ்டாலின் பதில்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார், என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் ‘ஒலிம்பிக் அகாடமி’ தொடங்கவும் சென்னையில் இன்று (நவ.11) நடைபெற்ற அரசு விழாவில் காணொளி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், யாருடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னை கூப்பிட்டால் நான் செல்வேன்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பல திட்டங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “வேறு யார் பெயரை வைக்கலாம்? விமர்சனம் வரத்தான் செய்யும். யார் பெயரை வைக்க வேண்டுமோ, அவர் பெயரைத்தான் வைக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.