“அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை எனில் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” - எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
அதிமுகவிற்கு வாக்களித்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் எனவும், இல்லையென்றால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேசன் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“அதிமுக வலிமையான கட்சி. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி. 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி. வலிமையான அதிமுகவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். திமுக பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்தது. சட்டம் ஓழுங்கு சீர் கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு தரவில்லை.
இந்த திமுக அரசுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். அதிமுகவிற்கு வாக்களித்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்து விட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர் அதை குடித்து இறந்து விட்டார். அவருக்கு 10 லட்சம் நிதி கொடுக்கிறார்கள். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு காட்சி அளிக்கிறது.
கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கட்டுமான பொருள் விலை உயர்ந்துவிட்டது. வீடு காட்டுவோர் கனவில் தான் கட்ட முடியும். மாநில அரசு டீசல் விலையை குறைக்கவில்லை. அதனால் அத்தியாவசிய பொருள் விலை தானாக உயரும். மத்திய அரசு அதிக வரி போடுவதால் இந்தியா முழுவதும் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும் தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். ஆனால் 3 ஆண்டு ஆகியும் ரத்து செய்யப்படவில்லை. எந்த அடிப்படையில் அதிமுக ஆட்சி இருட்டு ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.