For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வெற்றிப் பெற்றால் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுவோம்” - பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிப் பெற்றால் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுவேன் என்று பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
09:44 PM Mar 12, 2025 IST | Web Editor
“வெற்றிப் பெற்றால் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுவோம்”   பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி
Advertisement

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் அவை நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஆவணத்தையும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம் என்று அவை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை கிழித்ததை அடுத்து பந்தோபாத்யாயின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பந்தோபாத்யாயின் முடிவை
“இந்திய அரசியலமைப்பில் அரிதான சம்பவம்” என்று அழைத்தார்.

மேலும் சட்டமன்றத்திற்குள் கூட ஜனநாயகம் இல்லை. எதிர்க்கட்சிகள் கேட்கப்படுவதில்லை. திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லாவற்றையும் பலவந்தமாகச் செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்” என மார்ச் 18 வரை சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சுவேந்து அதிகாரி கூறினார்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக அவையை ஒத்திவைக்கும் திட்டத்தை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக, ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்காத சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் இதுதொடர்பாக பேசிய அவர்,

கடந்த நான்கைந்து நாட்களில், தம்லுக் தொகுதியில் ஒரு சில பகுதிகளில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் மற்றும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முர்ஷிதாபாத்தின் நவாடா மற்றும் உலுபேரியா மாவட்டத்தில், இந்துக்கள் தாக்கப்பட்டனர். இந்து கடை உரிமையாளர்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பாஜக வெற்றிப் பெற்றபின் முஸ்லிம் எல்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுவேன்” என தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“புனித ரமலான் மாதம் நடைபெற்று வருவதால், இஸ்லாமியர்களை டார்கெட் செய்கிறார்கள். நிலவும் பிரச்னைகளை திசைதிருப்ப, மதரீதியாகப் பேசி வருகின்றனர். நான் ஓர் இந்து. இதற்கு பாஜக எனக்கு சான்று கொடுக்க வேண்டியதில்லை. ஒருவர் இந்துவோ, சீக்கியரோ, பெளத்தரோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ... ஒரு முதலமைச்சராக அவர்கள் அனைவரையும் அரவணைப்பது என் பொறுப்பு.

நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. ஆகையால் தயவுசெய்து என்னிடம் ‘இந்து’ என்ற கார்டை வைத்து விளையாடாதீர்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags :
Advertisement