“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” - அமைச்சர் பொன்முடி!
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைப்பது குறித்து, மத்திய அரசு தமிழக வனத்துறையை அணுகும்போது, அந்த திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன.
இந்நிலையில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம், அழகர் மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதித்ததாக செய்தி வெளியானது. டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு 2015.51 ஹெக்டரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைப்பது குறித்து, மத்திய அரசு தமிழக வனத்துறையை அணுகும்போது அந்த திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது;
அரிட்டாபட்டி நிலம் வருவாய்துறையின் அறக்கட்டளை எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை உயிர் பன்முகத்தன்மை பகுதியாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். 250 வகை பறவைகள், வல்லூரு , ராசாளி பறவை போன்ற புதிய பறவை இனங்கள் அங்கு உள்ளன. அரிட்டாபட்டி பகுதி வனப்பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.
அங்கு டங்ஸ்டன் இலை எடுப்பதற்கான ஆலை அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வனத்துறையிடம் மத்திய அரசு அனுமதிக்கு கேட்கும்போது, அந்த திட்டத்தை நிராகரிக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.