"பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும்" - கனிமொழி எம்.பி பரப்புரை!
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!
இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேய்க்குளம், பழனியப்பபுரம், காட்டாரிமங்கலம், சின்னமாடன் குடியிருப்பு, வெள்ளமடம், செம்பூர், கேம்பலாபாத் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது கனிமொழி எம்.பி கூறியதாவது :
"இந்த தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்பதைத் தாண்டி, யார் இந்த நாட்டுக்கு வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டியது தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்த நாட்டை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரிவுபடுத்தி வருபவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய தேர்தல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும். சிஏஏ சட்டத்தின் மூலமாக மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜக அரசிற்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது,ஆனால்
விவசாயி கடன், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு இதுவரை ரத்து செய்யப்படவில்லை.
மேலும் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை குறைவாக உள்ளதாகக் கூறி
மத்திய அரசு இதுவரை ரூ.21,000 கோடியை பொதுமக்களிடம் அபராதமாக வசூலித்துள்ளது.
மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிதி உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி வந்த உடன் திமுகவும் காங்கிரஸ்
இயக்கமும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 100 நாள் வேலைக்குச் சம்பளம்
ரூ.400 மற்றும் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். அதேபோல கேஸ் சிலிண்டர் ரூ.500 பெட்ரோல் ரூ.75 ரூபாய் டீசல் ரூ. 65 ஆகியவை குறைக்கப்படும். வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை 16 ஆயிரம் கோடி முதலீட்டில் 15 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அந்த தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும்"
இவ்வாறு கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.