“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா - அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் இன்று (25-03-2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் ஆகிய இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு உரையாற்றினார்.
வீரத்தின் விளைநிலமாக இருக்கும் திருநெல்வேலி சீமைக்கு வந்திருக்கிறேன்! வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலையைத் தலைவர் கருணாநிதிஅமைத்த தென்குமரி முனைக்கு வந்திருக்கிறேன்!
குமரி முதல் இமயம் வரை என்று சொல்வோம்! அப்படிப்பட்ட பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் வெற்றி பெற உங்கள் ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பெர்ட் களம் காண்கிறார். பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமனின் பேத்தி இவர். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, மதச்சார்பின்மை மேல் பற்றுகொண்ட வேட்பாளராக உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக இங்கு இருக்கும் தம்பி விஜய் வசந்த் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வரும் ரிப்போர்ட்களில், “கன்னியாகுமரி எம்.பி. - விஜய் மிகவும் நன்றாகச் செயல்படுகிறார். தொகுதி மக்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார்” - என்று சொல்கிறார்கள்!
உங்களுக்காக உழைக்க அவர் கன்னியாகுமரியில் மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலைவிட இன்னும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
திருநெல்வேலியில் போட்டியிடும் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் மாவட்டக் காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். தென்னிந்தியத் திருச்சபை மூலமாகச் சமூகத் தொண்டும் ஆற்றி வருபவர். இவர்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.-யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல.
நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதிசெய்யப் போகிறது! உங்கள் வாக்குதான் மனிதநேயமிக்க ஒருவரைப் பிரதமர் பொறுப்பில் உட்கார வைக்கப் போகிறது!
தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால், அது உங்கள் ‘கை’யில்தான் இருக்கிறது. அதற்கு, பிரதமர் நரேந்திர மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா - அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழும் இந்தியாவை, வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள்!
அதை மனதில் வைத்து, அமைதியான – வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னால், குமரிக்கும் – திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே…
வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தீர்கள்… இரண்டு இயற்கைப் பேரிடர்! அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் - தென் மாவட்டங்களையும் தாக்கியது…
பிரதமர் மோடி அவர்களே… ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா? இல்லையே! நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினீர்களா? ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை – தர வேண்டியதை – உதவ வேண்டியதை - உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம்.
அமைச்சர்கள் – கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, மனோ தங்கராஜ் என்று, எல்லோரையும் இங்கே அனுப்பி வைத்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சைகள் அளிக்க, தொற்று நோய் எதுவும் வராமல் இருக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டேன்.
அதேபோல, உழவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைக் களத்திற்கு அனுப்பினேன்.
தமிழ்நாட்டின் மொத்த அமைச்சர்களும் இங்கு வந்து தங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். மக்களோடு மக்களாக கூடவே இருந்து, ஆறுதல் கூறி, என்ன தேவைகள் என்று கூடவே இருந்து, வேண்டியதை செய்து கொடுத்தார்கள்.
நானும், டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன்.
கடந்த பிப்ரவரி 25 அன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 38 ஆயிரத்து 614 பேருக்கு, 118 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ”கை”தான், இந்தக் ”கை”.
மத்திய அரசிடம் என்ன கேட்டோம்? ”மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்… அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று, இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு – மறு சீரமைப்பு – நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம்… தந்தார்களா? இல்லை.
நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம்.
பொன்முடி அவர்களை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம்.
இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், பா.ஜ.க. எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது?
ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு, செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் அதையும் ‘பிச்சை’ என்று ஏளனம் செய்வார்களாம்.
அம்மையார் அவர்களே… ஒரே ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்… அப்போது தெரியும்… மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று! அதற்குப் பிறகு, பிச்சை என்ற வார்த்தையே உங்கள் நினைவிற்கு வராது!
ஆட்சி இருக்கிறது… பதவி இருக்கிறது… என்று பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் ஆணவமாகப் பேசலாமா? அதிலும் ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறினால், இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் – பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார்.
தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம்! வெறுப்பு! வன்மம்! மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது!
மேம்பட்ட சிந்தனைகள் உள்ள நாம், நம்முடைய சகோதர –சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்! பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்!
தேர்தலுக்காக மட்டும் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரிடம் நானும் நீண்ட நாட்களாக ஒன்றைக் கேட்கிறேன். அதைத் திரும்பவும் கேட்கிறேன்… பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்காக உங்கள் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சிறப்புத் திட்டங்கள் என்ன? என் கேள்விக்கு என்ன பதில்? பதில் கூறுங்கள் மோடி அவர்களே…
தமிழ்நாட்டுக்கு என்று ஒரு சிறப்பு திட்டத்தின் பெயரைக்கூட சொல்ல முடியாமல், பத்தாண்டுகளாக எதைச் சாதித்தீர்கள்? ஆனால், எங்கள் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் திரும்பி வருகிறது! அதைக் கேட்கிறோமே, அதற்காவது பதில் வைத்திருக்கிறீர்களா? இல்லை அதற்கும் வாயாலே வடை சுடுவீர்களா?
பிரதமர் மோடி அவர்களே… திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி அல்ல! ஆனால், பல ஆட்சிகளில் பங்கேற்ற கட்சி! நாங்களே தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தோம் தெரியுமா? பட்டியல் போடட்டுமா?
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் அமைத்தோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் நம் கூட்டணி ஆட்சியில்தான், 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் செய்தோம்! ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்! 1,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்வு! புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்! தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்! சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம்! 1,650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை! 2,427 கோடி ரூபாய் செலவில் சேதுசமுத்திரத் திட்டம்! நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்! 908 கோடி ரூபாய் செலவில், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்! அடக்குமுறை பொடா சட்டம் ரத்து! தமிழ்நாட்டில் இருக்கும் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி! 1,828 கோடி ரூபாய் செலவில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அனுமதி! சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்! சென்னைக்கு அருகே தேசிய கடல்சார் பல்கலைக்கழகம்! திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்! கிண்டி - கத்திப்பாரா, கோயம்பேடு, பாடியில் மிகப்பெரிய மேம்பாலங்கள்! கரூர், ஈரோடு, சேலம் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா! துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் உருவாக்கியது. இன்னும் நிறைய இருக்கிறது!
இவை அனைத்தும் மத்திய அரசின் கூட்டணியில் தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலில், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள். இந்த மாதிரி பட்டியலிட்டுக் கூறுங்கள் என்றுதான் நான் பிரதமரை மிகுந்த பணிவோடு கேட்கிறேன். அதுகூட உங்களால் முடியவில்லை…
ஏன் என்றால், தமிழ்நாட்டையும் - தமிழ் மக்களையும் உங்களை மாதிரி வெறுத்த – வஞ்சித்த ஒரு பிரதமர், இந்திய வரலாற்றிலேயே கிடையாது! மாண்புமிகு மோடி அவர்களே… நீங்கள் வடிக்கும் கண்ணீரை உங்கள் கண்களே நம்பாது… பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்புவார்கள்?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்தீர்களே… நீங்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் அதுதான். அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது! பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது!
உங்கள் குஜராத் மாடல் நிர்வாகத்திற்கு அதுதான் எடுத்துக்காட்டு! ஆனால் திராவிட மாடல் நிர்வாகத்தின் எடுத்துக்காட்டு சொல்லவா?
அதே மதுரையில், நூலகம் அறிவித்தோம். ஜல்லிக்கட்டு அரங்கம் அறிவித்தோம். சென்னையில் மருத்துவமனை அறிவித்தோம்.
மூன்று ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் இருக்கிறோம். இன்றைக்கு மதுரையில் கம்பீரமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாணவ – மாணவிகளுக்கான அறிவு ஆலயமாக செயல்படுகிறது.
சமீபத்தில் கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, ஒரு அபத்தமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்குத் தி.மு.க.வும் - காங்கிரசும்தான் காரணம் என்று கூறி இருக்கிறார். பத்து வருடமாக, தி.மு.க.வும் காங்கிரசுமா ஆட்சியில் இருக்கிறது?
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்ததை வேடிக்கை பார்த்தது உங்கள் ஆட்சிதான். தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கி – கைது செய்து, படகுகள் - வலைகளைப் பறித்து – சித்திரவதை செய்கிறது இலங்கைக் கடற்படை. 56 இன்ச் என்று இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறீர்களே… தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்வதைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த, உங்களுக்கு ஏன் துணிச்சல் வரவில்லை? ஏன் தைரியம் இல்லை?
இலங்கையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார்கள் என்று 2014-ஆம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் இதே கன்னியாகுமரியில் கூறினீர்களே…
அதுமட்டுமா, அப்போது என்னவெல்லாம் கூறினீர்கள்? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சோனியா காந்தியும், ஜெயலலிதாவும்தான் காரணம் என்று கூறினீர்கள். பத்தாண்டுகள் முடிந்துவிட்டதே! இப்போது பெயர்களை மட்டும் மாற்றி, தி.மு.க.வும் - காங்கிரசும்தான் காரணம் என்று கூறுகிறார்.
பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்பதற்கு, இப்படி ஒப்புதலை அவரே தருகிறார். 2014-இல் இருந்து, 2024-க்குள் பத்து ஆண்டுகள்தான், தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் வரலாற்றிலேயே, அதிக அளவிலான தாக்குதல்…
நாங்கள் எத்தனை கடிதம் எழுதியிருப்போம்… நம்முடைய எம்.பி.க்கள் எத்தனை முறை இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருப்பார்கள்? இலங்கை மாதிரியான அண்டை நாட்டைப் பார்த்தே, இந்தளவிற்கு பயப்படும் ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்… இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடியின் முழுநேர வேலை என்ன தெரியுமா? இன்றைக்குப் பண்டித நேருவை என்ன சொல்லித் திட்டலாம்? சோனியாகாந்தியை வசை பாட முடியுமா? சகோதரர் ராகுல் காந்தியைப் பார்த்து, பயம் இல்லாதது போல் எப்படி காட்டிக்கொள்ளலாம்!
எல்லாவற்றிற்கும் மேல், தேர்தலுக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவிடாமல் காங்கிரஸ் வங்கிக் கணக்கை முடக்கி, பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசைதிருப்பலாம்… இதைத்தான் பிரதமர் மோடி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்... மோடியின் ஆட்சி அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே சாதகமான ஆட்சி. ஆனால், நாம் அமைக்கப் போகும் இந்தியா கூட்டணி ஆட்சி எல்லோருக்கும் பொதுவான ஆட்சி!
ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே உணவு! ஒரே பண்பாடு! ஒரே தேர்வு! ஒரே தேர்தல்! ஒரே வரி! என்று ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இந்தப் பல்லவியை அனுமதித்தால், ஒரே ஒரு மனிதர் மன்னராக இருக்கும் ஆட்சியாக இந்தியா மாற்றப்பட்டு விடும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவற்றைப் பாதுகாக்கும் நமது அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். நாடு இப்படிப்பட்ட பேராபத்தில் சிக்கியிருக்கிறது… ஆனால் இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல்… எந்தக் கொள்கையும் இல்லாமல்… வளைந்த முதுகுடன் வலம் வருகிறார் பழனிசாமி!
நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்து, நாட்டைப் படுகுழியில் தள்ளியுள்ள பிரதமர் மோடி பற்றியோ – பா.ஜ.க. பற்றியோ - கண்டித்துப் பேசத் தெம்பு இருக்கிறதா? பழனிசாமி அவர்களே…
பழனிசாமி அவர்கள், தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்களிடமும் செல்வாக்கை இழந்துவிட்டார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்த கட்சி பழனிசாமியின் அ.தி.மு.க.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தி.மு.க. சார்பில் நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியபோது - “எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்?” - என்று பா.ஜ.க.விற்கு டப்பிங் பேசியவர்தான் பழனிசாமி. இப்போது பா.ஜ.க.வின் கதை – திரைக்கதை – வசனம் – இயக்கத்தில் தனியாகப் போட்டி போடும் கபட நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
நேற்று பழனிசாமி திருச்சியில் பேசினாரே… பா.ஜ.க.வை விமர்சித்து அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தையாவது வந்ததா? இதுதான் கள்ளக்கூட்டணி! பா.ஜ.க.வை விமர்சிக்காமல், எதிர்க்காமல், தமிழ்நாட்டையே நாசப்படுத்த துணைபோகும் பழனிசாமி, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்று சபதம் எடுக்கிறார். தன்னுடைய விரல்களால் தமிழ்நாட்டு மக்களின் கண்ணைக் குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல; வெற்றுச் சவடால்!
மாவீரர்கள் பூலித்தேவனும் - வீரபாண்டிய கட்டபொம்மனும் - மருதுபாண்டியர்களும் – சுந்தரலிங்கமும் - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரும் - மகாகவி பாரதியாரும் – போராடிப் பெற்ற விடுதலையால் உருவான நாட்டில் - சர்வாதிகார ஆட்சி தலைத்தூக்குவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
அய்யா வைகுண்டர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார், மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராசர் போன்ற ஒப்பற்ற தியாகிகள் பிறந்த நம் மண்ணுக்கு ஒரு வரலாறு இருக்கிறது; ஒரு பண்பாடு இருக்கிறது! எப்படிப்பட்ட அடிமைத்தனங்களிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம் என்று ஒருபோதும் மறக்கக் கூடாது!
உங்கள் ஆதரவுடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சரான நான் – உங்களுக்காகச் செய்து கொடுத்த சாதனைகளை – தீட்டிக் கொடுத்த திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்போது பின்பற்றி வருகிறது. சிறப்பான திட்டங்களை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
”எல்லாருக்கும் எல்லாம்”தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் ஃபார்முலா! கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவர வேண்டும். இதுதான் நம்முடைய இலக்கு!
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆட்சிக்கு வந்தவுடனே வழங்கிய நாலாயிரம் ரூபாய் மக்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தது! எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது! அதற்கு, இந்தக் கன்னியாகுமரியைவிட பெரிய எடுத்துக்காட்டு வேண்டுமா? அந்த மகிழ்ச்சிதான் இங்கு இருக்கும் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் முகத்தில் புன்னகையாக வெளிப்பட்டது. அந்த புன்னகை தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை குடும்பங்களிலும் இருந்ததால்தான், வேலம்மாள் பாட்டியின் ஃபோட்டோ வைரல் ஆனது!
அதுமட்டுமா, கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிற திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டு சீர் இருக்கிறது என்று மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் உரிமையோடும், பாசத்தோடும் சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
வெறும் வயிற்றுடன் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது… குழந்தைகள் நலமாக இருந்தால்தான், நாடு வளமாக இருக்கும் என்று, பெருந்தலைவர் காமராசர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் போன்றே, நமது ஆட்சியில், நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்!
தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிக்க இளைஞர்களாக உருவாக வேண்டும் - உலகம் முழுவதும் தமிழர்கள் அறிவாற்றலால் வெல்ல வேண்டும் என நாம் உருவாக்கியிருக்கும், நான் முதல்வன் திட்டத்தால், 28 லட்சம் இளைஞர்கள் இதுவரைக்கும் பயனடைந்திருக்கிறார்கள்...
மகளிர் படிக்கச் செல்ல வேண்டுமா – வேலைக்குச் செல்ல வேண்டுமா - உறவினர்களைச் சந்திக்க செல்ல வேண்டுமா - பேருந்தில் கட்டணம் கிடையாது! அதுதான், 445 கோடி முறை மகளிர் பயணங்கள் மேற்கொண்ட விடியல் பயணம் திட்டம்!
பெண் பிள்ளைகள், அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்விக்குப் போகிறார்களா - மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!
வேலைக்காக வெளியூரில் இருக்கும் பெண்கள், பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ‘தோழி விடுதி திட்டம்!’
நம்முடைய திட்டங்கள் பயனாளிகளிடம் முறையே சென்று சேருவதை உறுதி செய்ய, சமீபத்தில் தொடங்கிய “நீங்கள் நலமா” திட்டம்!
இப்படியான நம்முடைய திராவிட மாடல் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வழங்கியிருக்கிறோம்… நாளை ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அமைந்ததும் சாதனைகளாக மாறப்போகும் அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்புகிறேன்…
பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும் - ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
உலர் மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.
பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.
மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க, மீனவக் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மீன்கள் பதப்படுத்துதல், மீன் வளர்ப்பு, மீன் தீவனம் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
மீனவ சமுதாய மக்களை அவசர காலத்தில் பாதுகாக்க ஹெலிகாப்டர் தளம் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை ரத்து!
ஒன்றிய அரசுப் பணிகளுக்குத் தமிழில் தேர்வு.
உலகப் பொதுமறையான திருக்குறள், தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
இதுமட்டுமல்ல, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய ‘புதிய ரயில்வே கோட்டம்’ அமைக்க ஆவன செய்யப்படும்.
அம்பாசமுத்திரம், வி.கே.புரம் சாலையில், அம்பை ராணி பள்ளி பக்கத்தில் இருக்கும் ரயில்வே கேட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தூண்டில் வளைவு இல்லாத கிராமங்களுக்கு, தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய நவீன தொழில்நுட்பம் கொண்ட பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும்.
குமரி முதல் களியக்காவிளை வரையும், காவல்கிணறு முதல் நாகர்கோயில் வரையும், நான்குவழிச் சாலைக்காக நிலங்களைக் கொடுத்தவர்களுக்கு உடனடியாக, இழப்பீட்டுத் தொகை வழங்க ஆவன செய்யப்படும்.
விளவங்கோடு பகுதியில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க ஆவன செய்யப்படும்.
ஏ.வி.எம். கால்வாயைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆவன செய்யப்படும்.
இப்படியான திட்டங்களை நிறைவேற்ற உங்கள் பேராதரவுடன் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.
ஒன்று மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்… தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் – விரோதமான கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு! அதை மட்டும் மறந்துவிடாதீர்கள்! தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. - இரண்டுபேரையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.
இந்தியாவின் எல்லை தொடங்கும் நம்முடைய குமரிமுனை இந்தியாவிற்கே “கை” காட்டி வழிகாட்டட்டும்! இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் இந்த இடத்தில் இருந்து, “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜனநாயகமும் சகோதரத்துவமும் வென்றது!” என்ற புதிய வரலாறு தொடங்கட்டும்!
பாசிசத்தை வீழ்த்த - இந்தியாவைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… உங்கள் ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.