“Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” - P.T.R. பழனிவேல் தியாகராஜன்!
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி
மைதானத்தில் இன்று அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“தேசிய கல்விக் கொள்கை முதல்முறையாக 1968ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையை 57 ஆண்டுகளாகியும் முறையாக அமல்படுத்த
முடியவில்லை. இருக்கின்ற நிதியை வைத்து எப்படி சிறப்பான கல்வியை வழங்குவது என்பதே மாநில அரசின் இலக்காக உள்ளது.
தேசிய அளவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.
வடமாநிலங்களில் இருமொழிகொள்கையை முறையாக பின்பற்றி இருந்திருந்தால், மும்மொழி கொள்கை பிரச்சனை வந்திருக்காது. மும்மொழிக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் திடீரென நான் சொல்வதை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம்?.
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் போது திடீரென
மாற வேண்டும் என்றால் அறிவுள்ளர்வகள் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? சில
மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையை கூட நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. தமிழ்நாட்டு அளவிற்கு கல்வியை பிற மாநிலங்களில் உயர்த்த முடியாததால், அவர்கள் அளவிற்கு எங்களை கல்வியில் குறைக்க முயற்சிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
"Success" ஆன மாடலை எடுத்துவிட்டு "Failure" ஆன மாடலை பின்பற்ற
வேண்டும் என்று சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? Google CEO
சுந்தர் பிச்சையே இந்தி தெரியாது என்று சொல்கிறார். அதனால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?” என்றார்.