“காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” - ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன நாள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைனையொட்டி 'நாங்கள் தயார்' என்ற பொதுக்கூட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற மாநில கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
வரவிருக்கும் மக்களவை தேர்தல் இரு வேறு சிந்தாந்தங்களுக்கு எதிரான மோதலை பிரதிபலிக்கும். ஒன்றாக இணைந்து மாநிலத் தேர்தலையும், மக்களவை தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியில் சாதாரண தொண்டர்களும் கேள்வி கேட்கலாம். பாஜக ஆட்சியில் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, வேலையின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கூட்டணியால் மட்டுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.
ஓபிசி, தலித், பழங்குடியினர் சமூகத்தினருக்கு அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என தன்னைத் தானே வர்ணித்துக்கொண்டார்.
ஆனால், நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது, 'நாட்டில் ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது. அது ஏழ்மைதான்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அப்படியென்றால், தன்னை ஏன் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவராக பிரதமர் குறிப்பிட்டார்?
அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.