#DMK | “கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..” - அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
‘என்னை கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்’ என காட்பாடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது கட்சிக்காரர்களிடையே பேசிய அமைச்சர் துரைமுருகன் "காட்பாடியில் கட்சிகாரர்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்து கொண்டுதான் வருகிறேன். கடந்த முறை தேர்தலின் போது கொஞ்சம் ஏமாந்து விட்டேன். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன். சில துரோகங்கள் செய்துவிட்டார்கள், அதுவும் எனக்கு தெரியும். அந்த துரோகிகளை கலை எடுத்துவிட்டு தேர்தலை நடத்தும் ஆற்றல் எனக்கு உண்டு.
நான் யாரைவேண்டுமாணாலும் மன்னித்து விடுவேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன். என்னையே கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்தை நான் இருக்கும் இயக்கத்தை, 60 ஆண்டுகள் கட்டிகாத்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன்” இவ்வாறு காட்டமாக பேசினார்.