அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா - காங்கிரஸ் பங்கேற்குமா? மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்
“அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு செல்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த பிரதிஷ்டை விழாவில் கலந் துகொள்ள, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். பின் அழைப்பு குறித்த முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது;
பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் மற்றும் கோயில் அறக்கட்டளை செயலாளர் என்னை சந்தித்து, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.