மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Factly’
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பு குறித்து காணலாம்.
மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் (இங்கே, இங்கே, இங்கே) ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
வைரல் பதிவின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, பதிவிற்கு தொடர்புடைய முக்கிய வார்த்தை தேடல் செய்யப்பட்டது. அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தியதாகவோ அல்லது மத்திய அமைச்சரவை சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துவதற்கான எந்த முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மதிப்பாய்வு செய்ததாகவோ நம்பத்தகுந்த அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படியொரு முடிவை உண்மையிலேயே அரசாங்கம் எடுத்திருந்தால், அது நிச்சயமாக ஊடகங்களால் அறிவிக்கப்பட்டிருக்கும்.
மேலும் இதுகுறித்த தேடலில், ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளை (இங்கே, இங்கே, மற்றும் இங்கே) காணமுடிந்தது. 9 ஆகஸ்ட் 2023 அன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் (இங்கே) தொடர்பான பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) செய்திக்குறிப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்த அமைச்சரவை விவாதங்கள் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 06 நவம்பர் 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய மத்தியத் துறை திட்டமான 'பிஎம் வித்யாலட்சுமி'க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 06 நவம்பர் 2024 அன்று (இங்கே) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக 7வது மத்திய ஊதியக் குழு (சிபிசி) எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை (இங்கே). இருப்பினும், குறிப்பிட்ட மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 வயதை விட அதிகமாக உள்ளது. 5வது மத்திய ஊதியக் குழு (சிபிசி) மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்த பரிந்துரைத்தது. அதிகபட்ச ஓய்வு வயது 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், வயதுக்கு மேற்பட்ட பணி நீட்டிப்புக்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மருத்துவ மற்றும் அறிவியல் நிபுணர்களைத் தவிர, 62 வயது வரை, ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் நீட்டிப்பு வழங்கப்படலாம் (இங்கே, இங்கே). செப்டம்பர் 2017 இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பல்வேறு துறைகள், அமைச்சகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள மத்திய சுகாதார சேவைகள் (CHS) தவிர மற்ற மருத்துவர்களுக்கான பணி ஓய்வு வயதை 65 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் அளித்தது (இங்கே).
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் வைரலாக பரவி வரும் நிலையில், இந்திய அரசின் செய்தித் தகவல் பணியகத்தின் (PIB) அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. 19 நவம்பர் 2024 அன்று இந்தச் செய்தி தவறானது என்றும், அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக இந்திய அரசு உயர்த்தவில்லை என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.