“ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்” – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.