எனக்கு நீதி வேண்டும்...என்னைப் பார்த்துதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? டிடிஎஃப் வாசன் கேள்வி!
என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? என டிடிஎஃப் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் ரேஸ் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸை 10 ஆண்டுக்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மதுரையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல், கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎப் வாசனை போலீஸார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தன்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்றால்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு. அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே. எவ்வளவு பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்றால் எனக்கு மட்டும் ஏன் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும் என நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது டிடிஎப் வாசன் கேள்வி எழுப்பினார்.