ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை பதிவு செய்த இந்த வழக்கில், ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து உத்தரவிட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஆகஸ்ட் 18 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.