“தவறை உணர்ந்தேன், ஆனால்...” - சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!
தெலங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா என்பவர் தான் பாதிக்கப்பட்டதாக கூறி சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் மீது சைபராபாத் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் “எல்லோரையும் கேள்வி கேட்கும் நான்தான் பதில் சொல்ல வேண்டும். 2016-ல், இது போன்ற ஒரு விளம்பரம் எனக்கு வந்தது. நான் அதை விளம்பரப்படுத்தினேன். சில மாதங்களுக்குப் பிறகு, தவறை உணர்ந்தேன். ஆனால், ஒப்பந்தத்தின் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த வருடம், ஒப்பந்தத்தை நீட்டிக்க அவர்கள் மீண்டும் என்னிடம் வந்தார்கள். அது தவறு என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
My response 🙏🏿🙏🏿🙏🏿 #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
2017-ல் வந்த எனது விளம்பரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். 2021-ல், வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது. அவர்கள் மீண்டும் எனது வீடியோக்களுடன் விளம்பரம் செய்தனர். நான் அவர்களுக்கு அறிவிப்புகளைக் கொடுத்து மின்னஞ்சல்களை அனுப்பினேன். அது தவறு என்று நான் சொன்னதும், அவர்கள் நிறுத்திவிட்டார்கள்”
இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.