"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை" - அண்ணாமலை விமர்சனம்!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. ஜான் மற்றும் அவரது மனைவி
ஆதிரா இன்று (மார்ச் 19) காலை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களின் கார் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில்
சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்களது காரை மர்ம கும்பல் வழி மறித்து நிறுத்தினர். பின்னர் மர்ம கும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு… pic.twitter.com/4AceILohgT
— K.Annamalai (@annamalai_k) March 19, 2025
இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.