For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததற்கான ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன்” - அண்ணாமலை பகீர்!

08:55 PM Dec 11, 2024 IST | Web Editor
“முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததற்கான ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன்”   அண்ணாமலை பகீர்
Advertisement

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் அதானி நிறுவனத்தை சார்ந்த யாரையும், எங்கேயும் சந்திக்கவில்லை என்று அறிவித்தால், அவர்கள் எந்த தேதியில், எங்கு சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை நான் வெளியிடுகிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல், ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு நேர் எதிரான திட்டமாக மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் கைவினை கலைஞர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிற ஒரு திட்டமாக தான் முதலமைச்சர் ஸ்டாலின் அதை அறிமுகப்படுத்தி உள்ளார்.

மீண்டும் ஒரு முறை திமுக கட்சிக்காரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு வந்திருக்கும் திட்டம் தான் கலைஞர் கைவினை திட்டம். மாநில அரசு உடனடியாக கலைஞர் கைவினைத் திட்டத்தை கைவிட்டு, மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழகம் எந்த அளவுக்கு பின்னோக்கி செல்கிறது என்பது, தணிக்கை ஆணையத்தின் ஆய்வறிக்கையை பார்க்கும் போது தெரிகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தால் எப்படி இருக்குமோ, அந்தளவிற்கு தமிழ்நாட்டில் மாநில அரசு சார்ந்திருக்கக்கூடிய நிறுவனங்கள் இருப்பதை தணிக்கை அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது எந்த கோயிலும் தணிக்கைக்கு உட்படுத்தவில்லை. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. எனவே, தமிழக அரசு மீது பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறது.

அதானிக்கு, திமுக அரசு ஒப்பந்தம் வழங்கி இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதானியை சந்தித்ததே கிடையாது என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதானியை முதலமைச்சர் சந்தித்தார் என நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை. அதானியை சந்திப்பது குற்றமும் இல்லை. தமிழக அரசு அதானிக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது என்பது தான் எங்களது குற்றச்சாட்டு. முதலமைச்சர் அதானியை சந்திக்கவில்லை என சொல்கிறார். ஆனால் முதலமைச்சரின் மருமகனும், முதலமைச்சரை சார்ந்திருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள், தனிச் செயலாளர் ஆகியோர், அதானியையும், அதானி நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகளையும் சந்தித்திருக்கிறார்கள். கடந்த வாரம் கூட இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

முதலமைச்சரின் மருமகன் சந்திந்தால், அது முதலமைச்சர் சந்திப்பது போல தானே. தனது குடும்ப உறுப்பினர்கள் அதானி நிறுவனத்தை சார்ந்த யாரையும் சென்னையில் எங்கேயும் சந்திக்கவில்லை என்று அறிவித்தால், அவர் எந்த தேதியில், எங்கு சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை நான் வெளியிடுகிறேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் பாஜக வலியுறுத்தி இருக்கிறது. டிச.12-ம் தேதி காலை டெல்லியில் கட்சியின் சார்பாக நானும், மத்திய அமைச்சர் எல்.முருகனும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் இது தொடர்பாக சந்திக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல செய்தியோடு வருவோம்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement