"கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்" - அண்ணாமலை!
கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதையும் படியுங்கள் : “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது பெற்றோருடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதையடுத்து, வாக்குப்பதிவிற்கு பின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
"மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும்.
எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.
தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். முழுமையாக இந்த தேர்தல் நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது"
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.