மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் - நயினார் நாகேந்திரன்....
தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”தமிழ்நாட்டில் கிபி ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் இதற்கான ஒப்புதலை அளித்து இன்றைய தினம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கிராமங்களுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டோம், இரவு நேரங்களில் கிராம பொதுக்கூட்டங்களை நடத்தி , பாஜகவின் 67 கட்சி மாவட்டங்களில் 37 மாவட்டங்களைக் கடந்து பாஜகவின் யாத்திரை பயணம் சென்று கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு யாத்திரையின் போது பொதுமக்கள் இடமிருந்து பெறப்பட்ட மனுக்களை நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ளோம். குறிப்பாக மத்திய அரசு சம்பந்தப்பட்டுள்ள ரயில்வே துறை தபால் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமச்சரிடம் மனுக்களை கொடுத்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்கும் நேரம் கேட்கப்பட்டுள்ளது, நேரம் ஒதுக்க பட்சத்தில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவேன்.
அதிமுகவுடன் கூட்டணி பலமான கூட்டணியாக தான் உள்ளது. தற்போதைய பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஐக்கிய ஜனநாய கட்சி , புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தோழமையாக ஒன்றிணைந்து மக்களுக்கான போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
புதுக்கோட்டையில் பாஜகவின் மக்கள் சந்திப்பு யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய தலைவர்கள் வருவது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பே முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.