“சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் சென்றாலும்... இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்” - அண்ணாமலை பேட்டி!
இன்று இரவு 3 மாதம் Fellowship courseக்காக லண்டன் செல்ல உள்ளதாகவும், ஆனால் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாக்டர் எச்.வி.ஹண்டே எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். பின்னர் விழா மேடையில் பேசிய அண்ணாமலை,
“ஹண்டே அரசியல் குறித்தும், நாட்டு நலன் குறித்தும் இதுவரை எனக்கு 159 கடிதங்கள் எழுதியுள்ளார். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அவர் அதில் பல்வேறு சிறப்பம்சங்களை எழுதியுள்ளார். 2010 முதல் பிரதமர் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசிவருகிறார். அதற்காகத்தான் முத்ரா கடன் உதவி போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியுள்ளார்.
எந்தக் கட்சி பின்புலமும் இல்லாமல் ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் பல்வேறு மாற்றங்களை நினைத்து தான் பிரதமர் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஹண்டே எழுதிய புத்தகத்தில் இந்திரா காந்தி என்ன தவறு செய்தார்? அரசியலமைப்புச் சட்டத்தை எவ்வாறு மாற்ற முனைப்பு காட்டினார் என்பது இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்தியாவின் நீர் மேலாண்மை துறை பற்றி அம்பேத்கர் பல்வேறு கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார். அதைக்கூட அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இணைய கூடிய நபர்களுக்கு பொறுப்பும் இருக்கிறது. செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை துரிதப்படுத்தப்படும். இன்று இரவு என்னுடைய 3 மாதம் Fellowship course-க்காக ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி செல்ல உள்ளேன். இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். துபாயிலிருந்து ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு வரும் என்றார்கள். ஆனால் வரவில்லை. முதல் 3 பயணம் தோல்வி அடைந்ததைப் போல இந்த பயணமும் இருக்கக்கூடாது.
எந்த அர்த்தத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று சொல்கிறார்கள். முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது. அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை உள்ளது. 2020 வரை இந்தி வேண்டாம் என்று சொன்னவர்கள், இப்பொழுது 3-வது மொழியாக எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் பயிற்று மொழி தமிழ். அதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு இளைஞர் அரசியலை வேற மாதிரி பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா? அதற்கு ஜெயக்குமார் விளக்கம் கொடுக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் டை அடித்துக் கொண்டு தங்களை இளைஞர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். பிரதமரின் விருப்பமே இளைஞர்கள் வர வேண்டும் என்பதுதான். பாஜகவில் 35 வயதுக்கு மேல் ஒரு நாள் ஆனாலும் அவர்கள் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருக்க மாட்டார்கள். இதை 3 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறோம்.
ஆனால் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிக்கு 50 வயது. முதலமைச்சர் எத்தனை ஆண்டு இளைஞர் அணி தலைவராக இருந்தார்? மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது துரதிருஷ்டவசமான ஒரு நிகழ்வு இதற்கு நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.