For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#UPS | மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

07:55 AM Aug 25, 2024 IST | Web Editor
 ups   மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன
Advertisement

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

தற்போது 2 வகையான பென்ஷன் (ஓய்வூதியம்) நடைமுறையில் உள்ளது. ஒன்று புதிய ஓய்வூதிய திட்டம். இன்னொன்று பழைய ஓய்வூதிய திட்டம். இதில் பல மாநிலங்கள், மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ( UPS or Unified Pension Scheme) கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ள முடியும். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிய திட்டத்தின் கீழ் 60% ஒய்வூதிய பலனை அடைய முடியும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. யூபிஎஸ் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 25 ஆண்டுகள் ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில் அவர் கடைசி 12 மாதம் வாங்கிய சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50% என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அதேபோல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் பணியின்போது இறந்தால் அவரது அடிப்படை சம்பளத்தில் 60% வரை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறலாம். இதற்கு முன்பு எப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றப்பட்டனரோ, அதேபோல் விருப்பம் உள்ளவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அமலாகப்போகும் ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம். இதற்கான நடைமுறை என்பது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு அமலாவதற்கு முன்பு செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் கேபினட் செயலாளர் டிவி சோமநாதன் தெரிவித்தார்.

அதேபோல் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2004 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன்பெறுவோருக்கு பொருந்தும். 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து ஓய்வு பெற்றவர்கள் முதல் 2025 மார்ச் 31-ம் தேதி வரை ஓய்வு பெற உள்ளவர்களும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து அனைத்து பலன்களையும் பெற முடியும். இந்த வேளையில் ஓய்வூதியதாரர்கள் திரும்பபெற்ற தொகையை கழித்து முந்தைய காலத்துக்கான அரியர்ஸ் தொகையையும் பெறுவார்கள் என கேபினட் செயலாளர் டிவி சோமநாதன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement