மனைவியை சுத்தியால் அடித்துக்கொன்ற கணவர்... 2 கி.மீ. நடந்தே சென்று போலீசில் சரண்... நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் நூருல்லா ஹைதர் (55). கணினி பொறியியல் பட்டதாரி. இவரது மனைவி அஸ்மா கான்(42). இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2005 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் ஒரு பொறியியல் மாணவர், மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நூருல்லா ஹைதருக்கு தனது மனைவிக்கு திருமணத்துக்கு புறம்பான உறவு இருந்ததாக சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல், நேற்றும் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் இரவு முழுவதும் வாக்குவாதம் செய்தனர். கோபத்தின் உச்சிக்கு சென்ற நூருல்லா ஹைதர் தங்கள் படுக்கையறை கதவைப் பூட்டிக்கொண்டு, மனைவியின் அலறல் சத்தம் வெளியில் கேட்காதவாறு முகத்தை தலையணையால் மூடி அவரது தலையில் பலமுறை சுத்தியலால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த அஸ்மா கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஹைதர் 2 கி.மீ. நடந்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். சந்தேகம் காரணமாக தனது மனைவியைக் கொன்றதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். சந்தேகத்தில் பேரில் கணவர் தனது மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.