மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது எப்படி? உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி!
தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்.8ம் தேதி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதாகமாக வந்தது.
அதன்படி, ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அரசியல் சான பிரிவு 143 (1) மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழியாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது.