பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? - காங்கிரஸ் கேள்வி!
பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது என காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. பேடிஎம் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை பேடிஎம் பேமென்ட் லிமிடெட் (PPBL) செய்து வருகிறது. சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கியில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கட்டுப்பாடுகளை விதிக்க காரணமாக இருந்துள்ளது.
எங்கள் கேள்விகள்:
▪️ பிரதமர் மோடியின் விருப்பமான தொழிலதிபர்கள் தங்கள் நல்லுறவு காரணமாக சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களா?
▪️ இவ்வளவு விதி மீறல்கள் இருந்தபோதிலும், Paytm பேமெண்ட் வங்கிக்கு ஏன் இவ்வளவு நீண்ட தளர்வு கொடுக்கப்பட்டது?
▪️ பணமோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள்… pic.twitter.com/3n5GR97P5K
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 5, 2024
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்,
“எங்கள் கேள்விகள்:
- பிரதமர் மோடியின் விருப்பமான தொழிலதிபர்கள் தங்கள் நல்லுறவு காரணமாக சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களா?
- இவ்வளவு விதி மீறல்கள் இருந்த போதிலும், பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஏன் இவ்வளவு நீண்ட தளர்வு கொடுக்கப்பட்டது?
- பணமோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக அமலாக்கத்துறை (ED) இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
- பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது?
- அந்த நன்கொடையாலும், பிரதமர் மோடியுடனான உறவுகளாலும்தான் பேடிஎம் இதுவரை பிழைத்திருக்கிறதா?
- பிரதமர் மோடியின் விருப்பமானவர்களான, அதானி மற்றும் இப்போது பேடிஎம்க்கு எதிராக ஏஜென்சிகள் ஏன் மெத்தனமாக இருக்கின்றன?
- அரசியல் நபர்களுக்கு எதிராக 95% வழக்கு பதிவு செய்யப்படுவதில், அமலாக்கத்துறையின் செயல்பாடு திருப்தியாக உள்ளதா?
- பேடிஎம் நுகர்வோரின் தரவு ரகசியமாக உள்ளதா அல்லது பாஜகவுடன் பகிரப்படுகிறதா?”
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சுப்ரியா ஸ்ரீனேட் பேசிய வீடியோவுடம் டேக் செய்து பகிரப்பட்டுள்ளது.