எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? "முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்" - ஆர்.பி.உதயகுமார்!
தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் முதல்முறை கிராம சபை கூட்டத்தில் காணொளி மூலமாக முதலமைச்சர் பேசுகிறார் என துறையின் முதன்மை செயலாளர் கூறியுள்ளார்.
முதலமைச்சரே 2021-ல் முதல் கிராமசபை கூட்டம் மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் நடந்தது. அதில் முதல்வர் நேரடியாக கலந்து கொண்டார். ஆனால் பாப்பம்பட்டி, செல்லம்பட்டியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான்கரை ஆண்டுகள் ஓடிவிட்டது ஆனால் வளர்ச்சி திட்டங்களை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை, இம்முறை 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் பொதுமக்களுடன் நேரடியாக பேசுவதாக முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு பைபர் நெட் மூலமாக இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களில் கூட அவருடைய உரையை மக்களுக்கு கேட்க செய்யும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கிராம சபை கூட்டத்திலே பங்கேற்று உரையாற்றுகின்ற முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுக்கப் போகிறார் ? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறாரா? ஆட்சி அமைப்பதற்கு அடித்தளமாக இருக்கிற தேர்தல் வாக்குறுதிகளை 525 வாக்குறுதிகளில் அவருடைய மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்?
10 சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை, ஆனால் அடுத்த தேர்தலை சந்திக்க வருகிறார். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த குடிமராமத்து பணி திட்டத்தை நீங்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் ஏதாவது ஒரு இடத்தில் செயல்படுத்தி இருக்கிறீர்களா?
அம்மா கொண்டு வந்த மடிக்கணிணி திட்டத்தில் இதுவரை மடிக்கணினி மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. எடப்பாடியில் ஆட்சிக்காலத்தில் அம்மாவின் திட்டங்களாக இருக்கக்கூடிய கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன வழங்கும் திட்டம், குடிமராமரத்து பணித்திட்டம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உணவகம் என்று மக்கள் வரவேற்கிற மக்கள் பயன்படுகிற திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அந்த திட்டங்கள் எல்லாம் எங்கே போனது?
525 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் ஏதாவது பெயர் சொல்லுகிற வகையிலே மக்கள் வரவேற்கும் வகையில் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டதா? நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்கள் செய்தீர்களா? ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்பு படித்தவர்களுக்கு இளைஞர்களுக்கு தருவோம் என்று சொன்னீர்களே எத்தனை பேருக்கு கொடுத்திருக்கிறீர்கள் ?
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பெட்டியில் வாங்கிய மனுவும், பெட்டியும் எங்கு போனது என தெரியவில்லை. மக்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கை சிதறு தேங்காயை போல சிதறி கிடக்கிறது. இதனால் தான் இன்று காணொளி மூலமாக கிராம மக்களிடத்தில் நேரடியாக அரசு சக்கரத்தில் இருந்தபடி இந்த முயற்சியை மேற்கொள்கிறீர்கள்.
வேண்டாம் ..வேண்டாம் ..மன்னராட்சி வேண்டாம்..! வேண்டும்..வேண்டும்.. எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வேண்டும் என்கிற உரிமை குரல் தான் கிராம சபை கூட்டத்திலே மக்களுடைய மனநிலை என்று தெரிவித்துள்ளார்.