"இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?"- கிளாம்பாக்கம் சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 18 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த ஒரு நல்ல சமாரியன் அவரை காப்பாற்றியுள்ளார்
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன; எளிதில் அணுகக்கூடிய பொருளாக போதைப் பொருள் மாறியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் NDPS வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே; 2021ல் NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா & மெத்தபெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது; ஆனால் கைதுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எப்படி? போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாடவிட தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டுகிறதா? நமது சகோதரிகள் நடமாட பாதுகாப்பான வீதிகளை கொடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.