ஹரியானாவில் அதிருப்தியையும் தாண்டி பாஜக வெற்றி பெற்றது எப்படி? காங்கிரஸ் எங்கே கோட்டைவிட்டது?
ஹரியானாவில் அதிருப்தியையும் தாண்டி பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டது எப்படி? காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? முழு விவரங்களை பார்க்கலாம்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
ஆனால் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை அதிகப்பட்சமாக காங்கிரஸ் கட்சி 40.57% வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 38.80% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 46 இடங்கள் பெற வேண்டும்.
இதுவரை 25% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹரியானா முன்னிலை நிலவரம் பாஜக, காங்கிரஸ் இடையே குறுகிய இடைவெளியிலேயே இருக்கும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவை பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், இயல்பாகவே அக்கட்சியின் மீது அதிருப்தி அதிகரித்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பு அதிகம் எனவும் பேசப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் இதையே பிரதிபலித்தன.
ஆனால் உண்மை நிலவரமோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பல்வேறு காரணிகளை முன்வைக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவையே காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால் தேர்தல் களத்தில் அது பலனளிக்கவில்லை.
அடுத்தப்படியாக, ஜாட், தலித் மற்றும் முஸ்லீம் வாக்குகள் தங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என காங்கிரஸ் நம்பியது. ஆனால் ஜாட் அல்லாத மற்றும் முஸ்லீம் அல்லாத வாக்குகளை பாஜக பெரிய அளவில் அறுவடை செய்திருப்பதாகவே தெரிகிறது.
இதே போன்று, கிழக்கு மற்றும் தெற்கு ஹரியானாவில் ஜாட் மக்கள் அல்லாத மற்ற பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் பாஜக தனது வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளதாக தெரிகிறது. ஜாட்கள் ஆதிக்கம் செலுத்தும் மேற்கு ஹரியானாவில் இது குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக கைகொடுத்துள்ளது. அங்கு ஜாட் அல்லாதவர்களின் வாக்குகள் பிஜேபிக்கு அதிக எண்ணிக்கையில் கிடைத்ததாக தெரிகிறது.
இந்த காரணங்கள் மட்டுமல்லாது, காங்கிரஸில் பூபிந்தர் சிங் ஹூடாவிற்கும் குமாரி செல்ஜாவிற்கும் இடையே உள்ள உட்பூசல்களை சரி செய்ய முடியவில்லை என்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது அம்பலமாகியுள்ளது.
உடைத்து கூற வேண்டும் என்றால், களத்தில், பாஜகவை போல காங்கிரஸ் ஒற்றுமையாக போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியினர் பலர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே போன்று ஹரியானாவில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக ஓபிசி தலைவரான நயாப் சிங் சைனியை நியமித்த பாஜகவின் முடிவும் வேலை செய்திருப்பதாக தெரிகிறது.
இப்படி, மக்கள் மனநிலை அறிந்து பாஜக முன்னெடுத்த கடைசி நேர அதிரடி நடவடிக்கைகளும், காங்கிரஸ் கட்சியினரின் ஒற்றுமையின்மையும் சேர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர வழிவகுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.