For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எந்த திட்டமும் கொண்டு வராமல் முதலமைச்சர் எப்படி மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்கிறார்?” - #EPS கேள்வி!

12:19 PM Nov 13, 2024 IST | Web Editor
“எந்த திட்டமும் கொண்டு வராமல் முதலமைச்சர் எப்படி மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்கிறார் ”    eps கேள்வி
Advertisement

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வராமல் எப்படி அவர் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்கிறார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி சில விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக எடுத்துரைத்து வருகிறார். அதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னை கொச்சைபடுத்தி பேசுவதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்பிலிருப்பதை உணராமல் பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார். நான் முதலமைச்சராக இருக்கும் போது அவர் எப்படி என்னை விமர்சனம் செய்தார். விருதுநகர் கள ஆய்வில் என்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என பேசுகிறார். சொல்ல வேண்டுமென்றால் கோவைக்கு பல்வேறு மேம்பால திட்டங்கள், சாலை வசதிகள், புதிய கல்லூரிகள், பல்வேறு குடிநீர் திட்டங்கள் என கோவைக்கு மட்டும் இவ்வளவு செய்துள்ளோம். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்.

கோவைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு - அவினாசி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எல்லாம் திமுக அரசு இப்போது திறந்து வைக்கிறது. ஆனால் அத்திக்கடவு - அவினாசி திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அதேபோல் அவிநாசி மேம்பால பணியும் முழுமை பெறவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எல்லாம் வேண்டுமென்ற ஆமை வேகத்தில் நடக்கின்றன. எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. வளர்ந்து வரும் கோவை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டுமென்று அறிவித்தோம். ஆனால் இன்னும் அதற்கான பணிகள் துவங்கவில்லை.

அதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணியும் கிடப்பில் இருக்கிறது. வெள்ளலூர் ரூ.168 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் 50% பணிகள் முடிந்த பிறகும் அதை கிடப்பில் போட்டுள்ளார்கள். மக்களை குழப்பி நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று வேண்டுமென்ற அரசியல் செய்கிறார்கள். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வராமல் எப்படி அவர் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்கிறார்?

ஒருபக்கம் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள். அவர்கள் 2026ல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்கட்சி பதவி வேண்டுமென்றால் அதை நாங்கள் செய்ய தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் திமுக அரசு செய்யவில்லை. பொய்யான நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது திமுக அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

கோவையில் வீட்டு வசதி வாரியம் மூலம் சிலருக்கு நிலம் ஒதுக்க அறிவித்தார்கள். ஆனால் அதை இன்னும் செயல்படுத்தவில்லை. முதலமைச்சரை விவாதத்திற்கு அழைத்தால் உதயநிதி பதில் சொல்கிறார். அவருக்கு என்ன தெரியும். உதயநிதிக்கு பதில் சொல்ல எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள். திமுக அரசில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அது யாரென்று உங்களுக்கே தெரியும். அதிமுக இருமினாலே ஒரு விவாதத்தை ஊடகத்தினர் நடத்துகின்றனர். ஆனால் திமுக அரசை விமர்சனம் செய்வதில்லை.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போதே சொல்லிவிட்டோம். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று, ஆனால் ஊடகத்தில் வேண்டுமென்றே அதிமுக - பாஜகவுடன் மறைமுக கூட்டணி என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள். எல்லா மாநிலத்திலும் 1 முதலமைச்சர் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் 4 முதலமைச்சர்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags :
Advertisement