For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும்?” - பிரியங்கா காந்தி கேள்வி!

06:51 PM May 04, 2024 IST | Web Editor
“அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும் ”   பிரியங்கா காந்தி கேள்வி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தலில் வயநாட்டை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடாதது குறித்து விமர்சித்த பிரதமர் மோடி, “கடந்த 2019 தேர்தலில் அமேதியில் தோல்வியடைந்ததால், இந்த முறை இளவரசர் (ராகுல் காந்தி)  ரேபரேலிக்கு தப்பிவிட்டார்" என்று விமர்சித்திருந்தார். 

இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது,

“பிரதமர் மோடி எனது சகோதரனை இளவரசர் என்று அழைக்கிறார். ஆனால், காங்கிரஸ் எம்.பி ராகுல் 4,000 கி.மீ நடைப்பயணம் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை கேட்டறிந்தார். இதை உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். நீங்கள் அவரை டிவியில் பார்த்தீர்களா? அவரது முகம் பளிச்சென்று இருக்கிறது. அவரது வெள்ளை குர்தா ஒரு கறை கூட இல்லாமல் உள்ளது. அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. 

பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. அனைவரும் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுகிறது. குஜராத் மக்கள் பிரதமர் மோடிக்கு மரியாதையையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர். நீங்கள் அவரை பெரிய தலைவர்களுடன் பார்த்திருப்பீர்கள். பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, பிரதமர் மோடி அவர்களை சந்திக்க செல்லவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து தேர்தலுக்காக விவசாய சட்டங்களை ரத்து செய்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உங்களுக்கு உரிமைகள் கிடைக்கும். வாக்களிப்பது மிகப் பெரிய உரிமை ஆனால், பாஜக அரசியல் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று பாஜகவினர் கூறும்போது, ​​மக்களிடமிருந்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. உலகின் தலைசிறந்த ஆளுமையாக விளங்கிய மகாத்மா காந்திஜி குஜராத் மண்ணில் பிறந்தவர். ஸ்ரீ சர்தார் படேல் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களும் குஜராத் மண்ணில் பிறந்தவர்கள்தான்” என்றார்.

Tags :
Advertisement