Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!
ஓசூரில் திருட்டில் ஈடுபட்ட முதியவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டு அவரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், நேரு நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்
பூபதி. கணவரை இழந்து தனியாக வசித்து வரும், இவர் கடந்த 2 ஆம் தேதி சொந்த வேலைக்காரணமாக வெளியூர் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீடு திரும்பிய பூபதி கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு முதியவர் மஞ்சள் பையுடன் சென்றது
தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று காலை ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி என்ற பகுதியில் அந்த முதியவர் நின்றது தெரியவந்திருக்கிறது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக்
(எ) பொன்னுசாமி (76) என தெரிய வந்ததது. மேலும், விசாரணையில் அவர் நேரு நகர்
பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கொள்ளை
அடிக்கப்பட்டு 35 சவரன் தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.