வரலாறு உங்களை நினைவில் கொள்ளும் டாக்டர் மன்மோகன் சிங்!
நவீன பொருளாதாரத்தின் தந்தை துளி அளவும் அதிரடி அரசியல் வாசமே இல்லாதவர். இந்தியா போன்ற பெரும் மக்கள் திறன் கொண்ட நாட்டை ஒரு சகாப்தம், தன் மவுனத்தினோடே செயல்களாலேயே வழி நடத்தியவர் மன்மோகன் சிங். அவரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆசியக் கண்டத்தின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர், இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், சர்வதேச நிதியத்தின் ஆளுநர் குழுவிலும் திறம்பட பணியாற்றியவர், செளத் கமிஷனின் கமிஷனர் மற்றும் பொதுச் செயலாளர் , ஐ.நா குழுவின் பொருளாதார ஆலோசகர், திட்டக்குழு தலைவர், இந்திய நிதி அமைச்சர், பிரதமருக்கான பொருளாதார ஆலோசகர் என பொருளாதாரம் சார்ந்து உலக நாடுகளை உள்ளடக்கிய அத்தனை உயர் பதவிகளிலும் இடம் பெற்றிருந்தார் டாக்டர் மன்மோகன் சிங்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று அரசு பொறுப்பு ஏற்கும் போது அதிரடி காங்கிரஸ்காரர்கள், இந்திரா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள், ராஜூவ் காந்தியின் வலக்கை, இடக்கையாக வலம் வந்த அனைத்து அமைச்சர்களின் வாயை அடைக்கும் விதமாக சோனியா காந்தி ஒரு முடிவெடுத்தார். ஒரு வார்த்தை கூட அரசியல் பேசாத மன்மோகன் சிங்கை பிரதமராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவராக இருந்த சோனியா தேர்வு செய்தது இந்தியாவை பொருளாதார விபத்திலிருந்து காப்பாற்றிய அதிமுக்கிய தருணம்.
நம்பர் 10 ஜென்பத் இல்லத்தில் சோனியா, மன்மோகன் சிங்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக தேர்வு செய்ய காரணம், உலக நாடுகள் உலக மயமாக்கலுக்குள் நுழைந்த 90களில் இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனமயமாக்கும் முயற்சிக்கு பொறுப்பு ஏற்கும் விதமாக அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து செய்த அதிரடி மாற்றங்கள்தான்.
2002ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலக் கட்டத்தில் அரங்கேறிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட மதரீதியான அடக்கு முறை, அமைதியின்மை என இந்தியா ஒரு பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போது மன்மோகன் சிங்கின் ஆலோசனைகள் நிதானமாக பொருளாதாரத்தை கையாள்வதற்கும் இந்தியாவை பெரும் நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றியதற்கும் பெரும் உதவியாக இருந்தது.
மன்மோகன் சிங் பிரதமர் ஆன பிறகு உலகமயமாக்கலுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் அதுவும் கிராமப்புற பொருளாதார பின்னணி கொண்ட இந்தியாவிற்கு ஏற்ற புதிய நவீன பொருளாதார கொள்கைகளை வடிவமைத்தார். அதன் நீட்சியாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். திட்டமாக மட்டுமல்லாமல் எதிர்வரும் அரசுகள் இத்திட்டத்தை கைவிடாமல் இருக்க சட்டமாகவும் மாற்றி அமைத்தார். கூடவே கிராமங்களை அருகில் உள்ள நகரங்களோடு இணைக்கும் சாலை திட்டம் இன்றளவும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்பை காத்து வருவதில் இதன் பங்கு முக்கியமானது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளே பெரும் நெருக்கடிக்கு ஆளான போது இந்தியாவை காப்பாற்றியது மன்மோகன் சிங் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். பல்வேறு அரசியல் அழுத்தங்கள் தாண்டி அவர் நிறைவேற்றிய சட்டங்கள் மற்றும் திட்டங்கள் இன்றும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பாலமாக அமைந்துள்ளன.
- சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005,
- 2005இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது,
- உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து ஏழைகளுக்கு உணவு தானியங்கள் வழங்குவதை சட்டப்பூர்வமாக்கியது.
- வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ‘இந்திரா காந்தி அவாஸ் யோஜனா’ திட்டம் மூலம் வீடுகள் கட்டித் தந்தது.
- குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், கல்வி கடனை எளிமையாக்கி அதிகளவில் இளைஞர்களை பட்டதாரிகளாக மாற்றியது,
- தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்து சாமானியர்களின் உரிமைக்கு சட்டவடிவம் கொடுத்தது,
- விவசாயிகளின் நீதி கிடைக்கும் வகையில் இவரது ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் சட்டம் – 2013 கொண்டு வரப்பட்டது,
- குழந்தைப்பேறு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்பட்டு, மகளிரும் குழந்தைகளும் பயனடைந்தது.
புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள், தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியது என நேற்றைய, இன்றைய இந்தியா மட்டுமின்றி நாளைய இந்தியாவும் பயனுறும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்தது என "சொல் அல்ல செயல்" என பிரதமராக மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்பையும், வரலாறுகளையும் அடுத்த தலைமுறைக்கும் பேசும்.
பன்முகத் தன்மை மீதும், நாடாளுமன்ற விவாதங்களின் மீதும் அதீத நம்பிக்கையை கொண்டு இருந்தார் டாக்டர் மன்மோகன் சிங். மேலே குறிப்பிட்ட சட்டங்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் கடும் விவாதங்களுக்கு பிறகே கொண்டு வரப்பட்டது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டாலும் இன்று இணைய சேவையை எளிதாக்கியதில், குறைவான கட்டணங்களில் இணைய சேவையை பெறுவது என்பது இவரது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட தகவல் தொழில்நுட்ப கொள்கைகளால்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நிலக்கரி ஊழல், காமன் வெல்த் ஊழல் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சியில் பல்வேறு நெருக்கடிக்கள் வந்த போதும் தன் மீது கரைபடியாமல் பார்த்துக் கொண்டதோடு அந்த பிரச்னைகள் எதுவும் தன்னை தொடரக் கூடாது என தொலை தூரத்திலயே வைத்திருந்தார்.
தன்னுடைய ஆட்சி காலத்தில் உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை 8.5% தொடர்ந்து வைத்திருந்தார். 2008 அமெரிக்காவில் லெமன் பிரதர் வங்கி மோசடிகளில் நெருக்கடிக்கு ஆளான போது இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சிறப்பான பங்களிப்புகளை வழங்கின. மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராக, நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த கால கட்டங்களில் இருந்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களை பாதுகாத்து வந்ததன் விளைவு 2008 பொருளாதார சிக்கலில் இருந்து இந்தியாவை மீட்க உதவியது.
பலவீனமான பிரதமர் என விமர்சிக்கப்பட்ட போது இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது உலகமே வியந்தோதியது. தனிநபர்க்கென எண்களிலான ஆதார் அடையாள அட்டை, வீடுதோறும் சமையல் எரிவாயு, VAT தொடங்கி GST அறிமுகம் வரை இன்றைய பிரதமர் மோடி ஆட்சியின் செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் டாக்டர் மன்மோகன் சிங்.
உலகம் முழுவதும் சத்தமின்றி இத்தனை சாதனைகளை செய்த பிரதமரை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, மசோதாக்கள் தேக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு உற்பத்தி குறைவு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அன்றைக்கு அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் Under Achiever பிரதமர் என கூறி கட்டுரை வெளியிட்டது.
சலனமின்றி சத்தமின்றி தனக்கு எதிராக சர்வதேச அரசியல் சதுரங்கங்களை எதிர்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தான் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பை ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை, சட்டப்பூர்வ கொள்ளை என நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கர்ஜித்தார்.
பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என வாக்களிப்பதற்காக உடல்நல குறைபாடுகளுடனும் தள்ளாத வயதில் நாடாளுமன்றம் வந்து ஜனநாயகத்தின் பக்கம் நின்றவர்.
"தற்கால ஊடகங்களை விடவும் அல்லது நாடாளுமன்ற எதிர்கட்சியை விடவும் வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன். அப்படியான வரலாறு எழுதப்படும்போது நாங்கள் காயமின்றி வெளியே வருவோம்" என்று டாக்டர் மன்மோகன் சிங் கூறியதைக் போலவே அவர் கட்டமைத்த நவீன இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகளால் வரலாற்றில் என்றும் நினைவில் இருப்பார்.