இமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தல் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!
இமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. 3 மற்றவை ஆகும். இந்த நிலையில்தான் மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஒரேயொரு இடத்திற்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் மல்லு கட்டின. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்தால் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று விடுவார். ஆனால், ஆறு எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றவை வகையில் சேரும் 3 எம்.எல்.ஏ.-க்களும் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 34 ஆகியுள்ளது. இதனால் இமாச்சால பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான மெஜரிட்டியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே ஆறு எம்.எல்.ஏ.-க்களை அரியானா மாநிலத்திற்கு பாஜக அழைத்துச் சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.