For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:12 PM Feb 29, 2024 IST | Web Editor
சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்   உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள IAS, IPS அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாட்டு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று,  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார்.  அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தன் (52) கடந்த ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர்,  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.  கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே கடந்த பிப். 23-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது.  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மத்திய அரசு அனுமதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலையில் சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அறிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாந்தனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில்,  சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள IAS, IPS அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  சாந்தனின் உடலை கொண்டுசெல்வதற்கான இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்று,  பயண ஆவணம்,  உடலை பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழ்நாடு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவற்றை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement