எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் அங்கீகாரத்தை மறு பரிசீலனை செய்யக் கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்ததை, தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை, தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தொண்டர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வண்ணம், கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டதாகவும், இதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்தது மட்டுமின்றி, கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும் அங்கீகாரம் அளித்ததாக தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராகவும் அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த மனுக்களின் அடிப்படையில், மனுக்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும், அதனடிப்படையில் உரிய முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் R. சுப்பிரமணியன் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே இதேபோல் வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.