டெல்லியில் விடிய விடிய கனமழை - விமான சேவை பாதிப்பு!
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், டெல்லியின் சாவாலாவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.