“அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார்” - ஆளுநர் ஆர்.என் ரவிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு!
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் இன்றும்(ஏப்.25) நாளையும்(ஏப்.26) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
ஆனால், இந்த விழாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. குறிப்பாக மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் பங்கேற்றவில்லை. மொத்தமாக 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 34 துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து திமுக, விசிக, இடது சாரி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைளில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்காததற்கு காரணம் தமிழ்நாடு அரசு காவல்துறையை கொண்டு அவர்களை மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியபோது, “நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியம். நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எவ்வித தடையும் இல்லாமல் உயர்கல்வி கிடைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முக்கியமானவர்கள். கல்வி நிலையங்களில் பிரச்சனைகளை அறிந்து களைவதற்கு துணைவேந்தர்கள் மாநாடு உதவும். அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் ஆர்.என் ரவி தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார்”
இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்