“சிவ, விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் விதமாக பேசியுள்ளார்” – அமைச்சர் பொன்முடிக்கு மறைமுகமாக ஆளுநர் கண்டனம்!
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில்,
'கல்விக்கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றதால் மாணவர்கள், பேராசியர்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “ வட மொழியில் வால்மீகி எழுதிய கம்பராமாயணத்தில் சீதையை தூக்கிச் சென்றார் என எழுதியிருப்பார்.
ஆனால், இங்கே கம்பர் பெண்களை கண்ணியத்துடன் எழுதி இருப்பார். இந்த ஊரில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் பெண்களை மிகவும் மோசமாக பேசியுள்ளார். அது மிகவும் கண்டனத்திற்குரியது.
அவரை நான் மரியாதைக் குறைவாக பேச மாட்டேன், gentle ஆக பேசுவேன், இவர்கள் சிவ, விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை காலில்
போட்டு மிதிக்கும் விதமாக பேசியுள்ளார். மலேரியா, டெங்கு கொசு-க்கு இணையாக சனாதனத்தை கூறியவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது. கம்பர் பாடத்தை கல்விச் சாலைக்குள் ஒரு பாடமாக படிக்க தேவை உருவாக்க வேண்டும்,
இதுவே கம்பருக்கு நாம் செய்யும் அஞ்சலி”
இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சைவ, வைணவம் என்று சர்ச்சையாக பேசினார். அவரின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி.-யிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு இன்று(ஏப்ரல்.12) மன்னிப்பு கோரியிருந்தார்.