“நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், பிரதமர் மோடி உங்களுக்கு வீடு கட்டித் தருவார்” - ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கராடி பேச்சு!
ராஜஸ்தான் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாபுலால் கராடி, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், மோடி உங்களுக்கு வீடு கட்டித்தருவார் என்று பொதுக்கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உட்பட பலரின் பெயர் முன்னிலையில் இருந்த நிலையில், எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மாவை முதலமைச்சராக பாஜக அரசு நியமித்தது. பின்னர், 22 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அவர்களில், 12 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த 12 கேபினட் அமைச்சர்களில், பாபுலால் கராடியும் ஒருவர். இவர் நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். இவர் கடந்த ஜனவர் 09-ம் தேதி உதய்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
“பாஜக தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கியுள்ளது. மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. ராஜஸ்தான் அரசு இப்ப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.450 க்கு சிலிண்டர்கள் கிடைக்கச் செய்கிறது. பசியுடனும் வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமரின் கனவு. நீங்கள், நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். மோடி உங்களுக்கு வீடு கட்டித்தருவார். பிறகு வேறென்ன பிரச்னை..." என்று கூறினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, அவருடன் மேடையிலிருந்தவர்களும், அவர் முன் கூட்டத்திலிருந்தவர்களும் சிரிப்பலையை ஏற்படுத்தினார். இவ்வாறு கூறியிருக்கும் அமைச்சர் பாபுலால் கராடிக்கு, இரண்டு மனைவியும், எட்டு குழந்தைகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.