For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி? - உண்மை என்ன?

07:58 AM Jun 15, 2024 IST | Web Editor
கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி    உண்மை என்ன
Advertisement

This News Fact checked by Newschecker

Advertisement

“கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் ஆய்வு செய்தது. இது குறித்து விரிவாக காணலாம்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில், கச்சத்தீவு பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  அப்பதிவு அரசியல் வட்டாரத்தில் கச்சத்தீவு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியது.

பிரதமர் மோடியின் பதிவில் “ கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன.  இந்த விசயம் ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது.  காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் இந்த விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  அதோடு, இந்தியாவின் ஒற்றுமை,  ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில்,  75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது இந்த விவகாரம் பெருமளவில் பேசப்பட்டது.  பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினர் மீண்டும் இதுபற்றி பேசினர். தேர்தல் நிறைவடைந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் “கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்” என குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கச்சத்தீவு விவகாரம் - அண்ணாமலை ஆலோசனை குழுவின் தலைவரா?

“கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அந்த பதிவின் கேப்சனில் ‘’ திமுக காரனுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய கதையா இருக்கும் அதும் ஆலோசனை குழு தலைவராக Annamalai K இருக்கார் ஆக்சுவலா மாநில முதல்வர் வகிக்க வேண்டிய பொருப்பு ஆனா இங்க தான் நாலும் மூன்றும் எத்தினி என்று பேபபர்லே கணக்கு போட்டு கூட சொல்ல முடியாத ஆளு மொதல்வரா இருக்காப்லே” என எழுதப்பட்டிருந்தது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தது. கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து அரசு தரப்பிலோ அல்லது பொது ஊடகங்களிலோ அதிகாரப்பூர்வ செய்தி வந்துள்ளதா என தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அரசோ, ஊடகமோ வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் பொய்யானது என்று தெரிவித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிபிட்டுள்ள ஜூன் 11, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடியதில்,  “”கச்சத்தீவு – புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது”,”கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”” என்று பிரதமர் மோடி பேசியதாக ஏப்ரல் 01, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

முடிவு:

கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.


Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement