"ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது" - காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh
ஹரியானா தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் இருந்தன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை (48) பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், ஹரியானா தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் கூட்டணி ஆட்சியின் முதன்மை நோக்கம். ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறக்கூடாது என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு மாறானதாக உள்ளது. ஹரியானா மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. மாநில மேம்பாட்டிற்காக மக்கள் என்ன நினைத்தார்களோ அதற்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஹரியானாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. வேட்பாளர்களின் புகார் மனுக்களை நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் அளிப்போம். மிகமுக்கியமான கேள்விகளை எங்கள் கட்சி வேட்பாளர்கள் முன்வைத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் கண்ணியத்துக்காக எதையும் செய்யாத கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.’’
இவ்வாறு காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.