“அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970-ம் ஆண்டு ஜுன் 19-ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனாகவும் ராகுல் காந்தி அடையாளம் காணப்பட்டார். தற்போது, தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர், பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கால்நடையையாய் பயணம் செய்தார். இளைஞர்கள், பின்தங்கியவர்கள், விவசாயிகள் போன்றோரை நேரடியாக சந்தித்து களநிலவரம் குறித்து அறிந்தார். மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், எதிர்பார்க்கும் உதவிகள் மற்றும் தீர்வுகள் குறித்து அறிய முற்பட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ராகுல் காந்தி எம்.பி.க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! நம் நாட்டு மக்களின் மீதான தங்களின் ஈடுபாடு உங்களை மிகப் பெரும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். வரும் ஆண்டு தங்களுக்குத் தொடர்ந்து முன்னேற்றத்தோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.