“வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” - சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
வேங்கை வயல் நீர்த்தேக்க தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்யுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு இன்று (ஜன.24) நீதிமன்ற விசாரணக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மற்றொரு மறுதாரர் தரப்பில், அரசின் இந்த அறிக்கைக்கு விரிவான பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு அரசின் அறிக்கைக்கு மார்ச் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என கோரிக்கையை ஏற்று, மார்ச் 10ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.