குஜராத் பாலம் விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் நேற்று முன்தினம் காலை தீடிரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மாஹி ஆற்றில் இருந்து மேலும் 7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரத்தில் மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே முறையான பராமரிப்பு இல்லாததே பாலம் விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.