குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி...!
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதித்துறை நடுவர் மன்றத்தால் விசாரிக்கப்படும் குற்ற வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணையை தொடங்க முடியும். ஆனால் இந்தியாவில் பல வழக்குகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு ஜாமின் வழக்கு ஒன்று விசாரித்தது. விசாரணையின் போது அவ்வழக்கில் இரண்டு ஆண்டுகளாக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்காமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் ஜாமின் பெற முடியாமல் இருப்பதாகவும் குற்றவாளிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் மகாராஷ்டிராவில் இதே போன்று 650 வழக்குகள் உள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் அமர்வு சுட்டிக்காட்டி மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் நாடுமுழுதும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்று தெரிவித்தது.
பின்னர் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் கருத்துக்களை வழங்க முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்துக்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.