கௌதமாலா பேருந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் கடந்த பிப்.10 ம் தேதி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த பேருந்து பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் சென்ற நிலையில் இடிபாடுகளில் இருந்து 53 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்திருந்தது. விபத்துக்குள்ளான பேருந்து எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கௌதமாலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.