அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று (டிச.19) பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!
இதனைத்தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இப்போது மேடையில் இருந்திருக்க முடியாது. சமுதாயத்தில் சிறந்து விளங்க முடியாது. மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு ’கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டில் பேராசிரியர் பிறந்தநாளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம்.
அரசுப்பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு, புடவை அல்லது சுடிதார் அணிந்து இனி பள்ளிக்கு வரலாம்” என தெரிவித்தார்.