ஆளுநர் தேநீர் விருந்து - மதிமுக புறக்கணிப்பு
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்திற்கான (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ளது.
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் நேற்று(ஜன.24) புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார்.
இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை பரப்புரை செய்யும் முகவராக இயங்கி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை மறுமலர்ச்சி திமுக தொடந்து வலியுறுத்தி வருகிறது.
அதனால் குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வை மறுமலர்ச்சி திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதேபோல திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.