“ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது” - திருமாவளவன் எம்.பி பேட்டி!
சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சட்டம் அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராகவும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இந்த சட்டம் அடாவடித்தனமாக பெருபான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த போக்கு பாசிச போக்காகும். இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு தொடர உள்ளோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கழைக்கழக மசோதாக்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டு வைத்தார். அதுமட்டுமில்லாது தனது அதிகார வரம்பை மீறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில் காலதாமதம் செய்தார். இன்றைக்கு உச்சநீதிமன்றம் அதை கண்டித்திருப்பதோடு அந்த 10 சட்ட மசோதாக்களையும் சட்டமாக்க தீர்ப்பளித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இது ஆளுநருக்கு புகுத்தியிருக்கும் ஒரு பாடம். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு மூக்குடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது. இவரைப்போல் சனாதன பின்னணியில் அரசியக் செய்யக்கூடிய ஆளுநர்கள் அனைவருக்கும் இது மறக்கமுடியாத பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.
அவர் ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை சட்டத்தையும் மதிக்கவில்லை. தான் கற்ற சனாதன அரசியலை அவர் உயர்வாக கருதுகிறார் என்பது அவருடைய அணுகுமுறையில் இருந்து தெரிய வருகிறது. திமுக அரசுக்கு நெருக்கடி தருவதாக எண்ணிக்கொண்டு அவர் தாந்தோன்றித்தனமாக செயல்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் தக்க பாடத்தை புகட்டியிருக்கிறது. பல்கழைக்கழக மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியிருப்பதைப்போல் வக்ஃப் சட்டத்தையும் செல்லாது என்று அறிவிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்குரிய சிந்தனை கொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பு வழங்கியிருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்ரல்.08) மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது.